பொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானது. காரணம் நம் முன்னே செல்லும் வாகனம் வலது பக்கமாகவே செல்லுமா? அல்லது இடது பக்கமாகவே செல்லுமா? அதன் ஓட்டுனர் வலது பக்கம் முந்துவதற்கு அனுமதிப்பாரா? இடது பக்கம் முந்த அனுமதிப்பாரா? இவை எல்லாமே பின் வரும் வாகன ஓட்டிகளுக்கு புரியாதபுதிர்தான்!.
மற்ற நாடுகளில் எல்லா வாகனங்களும் (குறிப்பாக மெதுவாகச் செல்லும் வாகனங்கள்) இடதுபுற ஓரமாகச் செல்லும். அவற்றை முந்தும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகன ஓட்டியிடம் முந்த அனுமதி கேட்க வேண்டும். அவர் அனுமதித்த பிறகு வலது புற இண்டிகேட்டர் போட்டு, வலது பக்க பாதைக்குச் சென்று அந்த வாகனத்தை முந்த வேண்டும், முந்திய பிறகு இடது பக்க இண்டிகேட்டர் போட்டு, இடது பக்க பாதைக்குச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.
ஒவ்வொரு முறை முந்தும் போதும் இந்த முறைப்படிதான் முந்த வேண்டும். இது போல சரியான முறையில் முந்தினால் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு முறை முந்தும் போதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த விதியை மீறுபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.