சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் பல தவறுகள் சாலை விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. பாதசாரிகள் என்றால் சாலையைப் பயன்படுத்தும் யாரோ சிலர் என்று நினைக்க வேண்டாம். ஒரு விதத்தில் நாம் அனைவரும் சில நேரங்களில் பாதசாரிகள்தான். கார், வேன், பேருந்து, லாரி போன்றவற்றை ஓட்டுபவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கூட அவரவர் வாகனங்களிலிருந்து இறங்கி சாலையைப் பயன்படுத்தும்போது அவர்களும் பாதசாரிகள் தானே!
பாதசாரிகள் சாலையின் வலதுபுற ஓரத்திலேயே நடந்து செல்ல வேண்டும், அப்போதுதான் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்ல முடியும்.. இடது புற ஓரமாக நடந்து சென்றால் நம் பின்னே வரும் வாகனமே நம்மீது மோதிவிட்டுப் போய்விடக்கூடும்.இதை மறந்து விடக் கூடாது.
“ஸீப்ரா க்ராஸிங்” என்று சொல்லக்கூடிய பாதசாரிகள் சாலையைக் கடப் பதற்கான குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாலையைக்கடக்க வேண்டும். சாலையைக் கடப்பதற்கு வசதியாக மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ இருக்கும் இடங்களில் அவற்றைப்பயன்படுத்தியே சாலையைக் கடக்கவேண்டும். அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்பைத்தாண்டிக்கொண்டு சாலையைக் கடப்பது சரியான செயலாகுமா?
சிக்னல்களில் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரியும் போது மட்டுமே சாலையைக் கடக்கவேண்டும். வாகனம் ஏதும் வரவில்லை என்றால்கூட பச்சை விளக்கு இல்லாத நேரத்தில் கடக்கக் கூடாது. ஏனென்றால் மற்றொரு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பச்சை விளக்கு எரிவதால் மிக வேகமாக அந்த இடத்தைக் கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வரலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
சாலையில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் சாலை ஓரத்திலேயே வீடுகள் இருக்கலாம். வீட்டிலிருந்து படி இறங்கி னாலே சாலையில் கால் வைப்பதாக இருக்கும். அது போன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் கவனமாக வாகனத்தை ஓட்டவேண்டும்.
மழை நேரங்களில் சாலையில் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும்.. எல்லோருமே தண்ணீரில் கால் வைக்காமல் நடக்கவே முயற்சிப்பார்கள் கிட்டதட்ட சாலையின் நடுப்பகுதிக்கே கூட அவர்கள் வந்துவிடக்கூடும். அது போன்ற நேரங்களில் மிக மிக எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.
பேருந்து நிறுத்தங்களில் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிய உடன் சாலையின் மறுபக்கமிருக்கும் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ அல் லது வங்கிக்கோ செல்வதற்காக பேருந்தின் முன்பாகவோ அல்லது பின்பக்கமாகவோ சாலையைக்கடக்க முயற்சிப்பார்கள். அது போன்ற நேரங்களில் இதை நினைவில் வைத்துக்கொண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கவனமாக ஓட்டவேண்டும். .