விபத்துக்களை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள்
சாலையிலுள்ள குறைபாடுகள்கூட விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மேடான சாலையில் ஏறும்போதும், திருப்பத்தில் வாகனத்தைத் திருப்பும் போதும் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எதிரே வாகனம் வருவது தெரியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராமல் திடீரென அவை எதிரெதிராக வருகின்ற நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை நல்ல நிலையில் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையிலும், அங்கங்கே தண்ணீர்தேங்கியுள்ள நிலையிலும் ஓட்டுனர்கள் பல்லம் குழியைத் தவிர்த்து நல்ல பகுதியில் ஓட்ட முற்படுவார்கள். இதே போல எதிரே வரும் வாகன ஓட்டியும் செயல்படும் போது வாகனங்கள் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
சாலை ஓரத்தில் ஜல்லியை கொட்டியும், தார் டின்களை சேகரித்து வைப்பதும் சாலை பழுதுபார்க்கம் எந்திரங்களை நிறுத்தி வைப்பதும் கூட விபத்துக்களை ஏற்படுத்தும். எனவே சாலை நல்ல நிலையில் பராமரிக்கப் படுவதும் விபத்துக்களைத் தவிர்க்க உதவும்.
சாலையில் சரியான அளவில், சரியான முறையில் அமைக்கப்படாத, வண்ணம் தீட்டப்படாத, முன் அறிவிப்பு வைக்கப்படாத வேகத்தடைகள் விபத்துக்குக் காரணம் ஆகின்றன. இவை குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன. எனவே வேகத்தடை களை சரியான அளவில் அமைப்பதுடன் அவை நன்கு தெரியும்படிமஞ்சள் வண்ணம் தீட்டி, அறிவிப்புப் பலகையும் வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாகப் பார்த்து ஓட்ட வசதியாக இருக்கும்: விபத்துக்களையும் தவிர்க்கலாம்.
டயர் பஞ்சர் ஆவது, திடீரென வாகனம் பழுதாவது, இயந்திர பாகங்கள் உடைந்து போவது போன்ற வாகனத்தில் ஏற்படும் குறைபாடுகள் விபத்துக்களுக்குக் காரணமாகின்றன, இதே போல எதிரே வரும் வாகனத்தில் ஏற்படும் இயந்திரக்கோளாறுகளும் நமது வாகனத்தின் விபத்துக்குக் காரணம் ஆகிவிடலாம். இவ்வித விபத்துக்களுக்கு ஓட்டுனர்கள் காரணமில்லை என்றாலும் கூட எதையும் எதிர் பார்த்து ஓட்டுவதும், அதிவேகமாக ஓட்டாமல் இருப்பதும் இவ்விபத்துக்களின் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க உதவ முடியும். முன்னெச்சரிக்கை பராமரிப்பின் (preventive maintenance) மூலம் வாகனங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்- அதனால் இது போன்ற விபத்துக்களே ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளவும் முடியும்.