Powered By Blogger

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

பயணிகள் விபத்துக்கு காரணமாகலாமா?



வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் கூட விபத்து ஏற்படக் காரணமாகி விடுகிறார்கள்.. பத்திரமாக  தங்கள் ஊருக்கு போகத்தானே விரும்புவார்கள் பயணிகள். அப்படியிருக்க அவர்களே விபத்துக்களுக்குக் காரணமாவது எப்படி?  

ஓடும் வண்டியில் ஏறக்கூடாது, இறங்கக்கூடாது, படியில் நின்று பயணம் செய்யக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்தவைதான் ஆனாலும் இதனை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள். பேருந்தின் உள்ளே ஏறும் வழிக்கு எதிரே நின்று கொண்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த கண்டக்டர் திடீரென்று டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்திலிருந்து கீழேவிழுந்தார். அப்படி விழுந்தவர் தலையில் அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டார். கி ட்ட தட்ட ஒரு வருடகலம் கோமாவிலிருந்தார் என்றால் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எவ்வளவு கஷ்டங்கள். ஓடும் பேருந்தில் நின்று கொண்டே செல்லக்கூடிய  அனுபவம் உள்ள நடத்துனருக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!. 

“கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்”’ என்று எல்லாப் பேருந்து  களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.. யாராவது இப்படி கை, தலை வெளியே வைத்திருப்பவர் களை கண்டக்டர், டிரைவர்  பார்த்தால்  உடன் எச்சரிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை.  எதிரே வரும் அல்லது  முந்திச் செல்லும் வாகனத்தினால் கை, தலையில் அடிபட்டு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கை, தலையை வெளியே வைக்காமல் பயணம் செய்வது நல்லது..

பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் சந்தோஷமாகப் பயணம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சத்தம் போட்டு ஆடிப் பாடுவது ஓட்டுனரின் கவனத்தை திருப்புவதாக அமைந்துவிடக்கூடாது.

கார்களில் பயணம் செய்பவர்கள் திடீரென்று வலது புறம் திரும்புங்கள் இடது புறம் திரும்புங்கள் என்று ஓட்டுனரிடம் சொல்லக்கூடாது, எங்கு போகவேண்டும் எப்படி போகவேண்டும் என்று முன்னதாகவே ஓட்டுனரிடம் சொல்லிவிடுவது நல்லது பல விபத்துக்களைத் தவிர்க்கவும் இது உதவும்..

எப்பொழுதும் காரின் இடது  புறம் மட்டுமே இறங்கவேண்டும், வலது புறக்கதவைத் திறந்துகொண்டு இறங்கக்கூடாது. அப்படி வலது புறம் இறங்கினால் பின்னால் வரும் காரோ அல்லது மோட்டர் சைக்கிளோ உங்கள் மீது மோதிவிடக்கூடும். இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பயணம் செய்தால் விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.