Powered By Blogger

வெள்ளி, 16 மார்ச், 2012

விபத்துகள் குறையாதா?


உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள். ஆனால் மொத்த வாகனங்களில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் இல்லை. வாகனங்கள் குறைவு, விபத்துகள் அதிகம். காரணம் விதிகளை மதிக்காத டிரைவர்கள், குடித்துவிட்டு ஓட்டுபவர்கள். 2010ம் ஆண்டில் மட்டும் 1.30 லட்சம் பேர் விபத்து காரணமாக இறந்து போயிருக்கிறார்கள். சாலை விதிகளை மதிக்காமல் மீறுவதில் இந்தியர்களை மிஞ்ச முடியாது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன்வேயில் செல்வது, விடாமல் ஹாரன் அடித்து வெறுப்பேற்றுவது, குடித்து விட்டு ஓட்டுவது, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல் ஓட்டுவது என பல விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதிகளை மீறுகின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. சாலையில் காரை ஓட்டிச் செல்வது சந்தோஷமான அனுபவமாக இருந்தது ஒரு காலம். இப்போது அது அபாயகரமான வேலையாகி விட்டது.

குடித்து விட்டு நிதானம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களால்தான் அதிகம் விபத்து நடக்கிறது. இப்படி விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இறப்பு, ஊனம், சேதம், வழக்கு செலவு என ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரு மடங்கு அதிகரித்துள்ளது. சொகுசு வாகனங்கள், நல்ல சாலைகள் வந்தபிறகும் விபத்துகள் குறையாமல், அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 8 லட்சம் பேர் சாலை விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தியுள்ளனர். 

ஆனால் அபராத தொகை கடுமையாக இல்லாததால், மீண்டும் மீண்டும் விதிமீறல் நடக்கிறது. அரசு தரப்பிலும் விபத்தை குறைக்க நடவடிக்கை தேவை. 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளை சாலை பாதுகாப்பு ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படவில்லை. ஒரு விபத்தால் குறைந்தது 2 குடும்பங்கள் பாதிக்கின்றன. விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் இருந்தால் சாலை விபத்துகள் குறையும் என்கிறது சர்வதேச சாலை அமைப்பு.

நன்றி; தினகரன் தலையங்கம்
paaa

2 கருத்துகள்:

  1. மிகவும் சிக்கலான பிரச்சினை, அவைநாயகம். நமது நாட்டு மக்களின் தேசீய குணமே சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை என்று ஆகிப்போனது. நாட்டின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்தான் வழிகாட்டிகளாக செயல்படவேண்டும். அவர்களே நெறி பிறழ்ந்து நடப்பதால் மக்களும் அந்த வழியிலேயே நடக்கிறார்கள்.

    இதில் யாரைக் குற்றம் சொல்வது. சாலை விபத்துக்கள் என்பவை இந்த கலாசாரக் கேட்டின் ஒரு பக்கமே. வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் ஒழுக்கமின்மையே மேலோங்கி இருக்கும்போது, ஒரு பக்கத்தை மட்டும் தனித்து சீர்திருத்த முடியுமா?

    மிக்க மனவருத்தம் தரும் நிலை.

    பதிலளிநீக்கு
  2. பழனி.கந்தசாமிMar 16, 2012 05:19 AM
    "வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் ஒழுக்கமின்மையே மேலோங்கி இருக்கும்போது, ஒரு பக்கத்தை மட்டும் தனித்து சீர்திருத்த முடியுமா?"

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாம் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டிருப்போம். திருந்த நினைக்கும் கொஞ்சம் பேராவது புரிந்துகொண்டால் சரி. உங்கள் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.